Mahadeva Padippakam
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
என்று மகாகவி பாரதி பாடியது போல போரினாலும், வறுமையினாலும் சிதைந்து போன சிறுவர், சிறுமியரது வாழ்வில் கல்வி என்னும் விளக்கு ஏற்றி வைக்கும் கருவியாக மகாதேவா படிப்பகம் தனது செயற்பாடுகளை முன்னிறுத்தி வருகிறது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இரசாயவியல் ஆசிரியராக இருந்து மாணவர்களிற்கு கல்வியையும், சமுகத்தொண்டையும் கற்பித்த ஆசிரியர் மகாதேவா அவர்களின் ஞாபகார்த்தமாக அவரின் பழைய மாணவர்கள் “மகாதேவா படிப்பகம்” என்னும் கல்விசார் சமுகசேவை நிறுவனத்தை வன்னிப் பிரதேசத்து முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்டுவான் என்னும் கிராமத்தில் 2012 ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறார்கள்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர் சங்கம் தொடங்கி இருபத்தந்து ஆண்டுகள் நிறைவு பெற்ற நிகழ்வினை ஒட்டி “மகாதேவா படிப்பகம்” தொடங்கப்பட்டது. தண்டுவான் மகாவித்தியாலத்தின் மாணவ, மாணவியர்கள் பாடசாலை முடிந்த மாலை நேரங்களிலும், வார இறுதி நாட்களிலும் படிப்பகத்தில் வந்து கல்வி கற்கிறார்கள். தொடங்கிய ஓராண்டில் 2013 ஆம் ஆண்டில் தண்டுவான் மகா வித்தியாலய வரலாற்றில் முதன் முறையாக மாணவ, மாணவியர் கல்வி பொதுத் தராதர சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்று மகாதேவா படிப்பகத்தின் கடின உழைப்பு தமது கல்வியிற்கு எவ்வளவு உறுதுணையாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டினார்கள்.
2014 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர சாதாரண பரிட்சையில் சித்தியடைந்து உயர்தரத்திற்கு சென்ற மாணவர்களில் முதன் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களிற்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர் சங்கம் ஒவ்வொரு மாதமும் நிதி உதவி செய்து வருகிறது. இவர்கள் போரினால் தமது தாய், தந்தையரை இழந்து தமது உறவினர்களுடன் வாழ்ந்து வரும் மாணவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு சித்தியடைந்த மூன்று மாணவர்களிற்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் பிரித்தானிய பழைய மாணவர் சங்க உறுப்பினருமான திரு. மஜீதரன் (89 உயர்தரம்) அவர்கள் அம்மாணவர்களின் கல்விக்கும், வாழ்விற்குமான உதவிகளைச் செய்து வருகிறார்.
2012 ஆம் ஆண்டு தொடங்கிய “மகாதேவா படிப்பகத்தின்” நிர்வாகச் செலவுகளிற்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தினால் வருடம் தோறும் ஒன்பது இலட்சம் ரூபாய்கள் வழங்கப்பட்டு வருகிறது. எம் கல்லூரித் தாயின் அன்புப் புதல்வர்களின் பெருமுயற்சியினால் இச்சமுகத் தொண்டு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இக்கல்வித் தொண்டுக்கு கை கொடுக்கும் கல்லூரித் தாயின் கண்மணிகளிற்கு பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தின் கோடானுகோடி நன்றிகள் என்றும் உரித்தாகட்டும்.
பிரபாகரன் (சுல்தான்) (90 உயர்தரம்), சிவலோகநாதன் ஜெகன் (88 உயர்தரம்), செல்வதுரை செந்தில்நாதன் (2012 பழைய மாணவர் சங்க தலைவர்) ஆகியோர் மகாதேவா படிப்பகத்தின் பிரித்தானியா இணைப்பாளர்களாக இருந்து வருகின்றார்கள்
கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ் இந்துக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 125 வருடங்கள் நிறைவடைந்தது. அதன் ஒரு அங்கமாக முல்லைத்தீவு தண்டுவான் மகாவித்தியாலய மாணவர்களிற்கும், மண் சரிவினால் பாதிக்கப்பட்ட பதுளை தெமோதரை சௌதம் தமிழ் மகாவித்தியாலத்திற்கும் யாழ் இந்துக் கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர் சங்கம் பாடசாலை உபகரணங்களை வழங்கியது. பிரித்தானியாவில் இருந்து சென்ற பழைய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் முல்லைத்தீவிற்கும், மலையகத்திற்கும் நேரில் சென்று இந்த உதவிகளை வழங்கியிருந்தனர். யாழ் இந்துக் கல்லூரி பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தின் இந்த முன்முயற்சியை இன்று மற்றப் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களும் பின் தொடர்ந்து வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் உள்ள பாடசாலை மாணவர்களிற்கு தமது உதவிகளை வழங்கி கல்விக்கும், சமுகத்திற்கும் பெருந்தொண்டு செய்கிறார்கள்.
இதுவரை சபா சுகந்தன் (86 உயர்தரம்), செல்வதுரை தேவராஜா (86 உயர்தரம்), சாந்திரட்னம் ஜெயபிரகாஷ் (89 உயர்தரம்), பிரபாகரன் (சுல்தான்) (90 உயர்தரம்), சிவலோகநாதன் ஜெகன் (88 உயர்தரம்), செல்வதுரை செந்தில்நாதன் (2012 பழைய மாணவர் சங்க தலைவர்), சஞ்சீவ்ராஜ் (88 உயர்தரம்) ஆகியோர் மகாதேவா படிப்பகத்துக்கு நேரடியாக சென்று தேவையான விடயங்களை செய்து இருக்கின்றார்கள்
125 ஆம் ஆண்டு நிறைவையொட்டி கல்லூரியில் நடந்த விழாவில் முல்லைத்தீவு தண்டுவான் மகாவித்தியாலயம், மகாதேவா படிப்பகம் என்பவற்றை சேர்ந்த மாணவர்களின் நாடகமும் பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையினால் மேடையேறியது. பிரித்தானியாவில் “தமிழ் அவைக் காற்று கழகம்” என்ற நாடகத்திற்கான அமைப்பையும், பள்ளியையும் நடாத்தி கலைத் தொண்டு செய்து வருபவரும், யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமான இயக்குனர் பாலேந்திரா அவர்கள் இலங்கை சென்று அம்மாணவர்களின் நாடகத்தை நெறிப்படுத்தினார். வன்னியில் இருந்து யாழ்ப்பாணம் சென்று அம்மாணவர்கள் தமது வாழ்வையும், வலிகளையும் நாடகமாக வெளிப்படுத்தியமையை ஊடகங்கள், பொதுமக்கள் என எல்லாத் தரப்பினரும் பாராட்டினார்கள்
தண்டுவான் மகாவித்தியாலத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரையிலான வகுப்புகள் மட்டுமே இருக்கின்றன. அங்கு சாதாரண தரம் வரையில் கல்வி கற்று பின்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் பிற பாடசாலைகளிற்கு கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்புகளிற்கு கல்வி கற்க செல்லும் மாணவர்களிற்கும் “மகாதேவா படிப்பகம்” தனது கல்விச்சேவையை தொடர்ந்து செய்து வருகிறது. இவ்வாறு தண்டுவான் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற இரு மாணவர்கள் முதன் முறையாக 2015 ஆம் ஆண்டு உயர்தரப் பரிட்சையில் சித்தியடைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்பதற்கு தெரிவாகியுள்ளனர். மகாதேவா படிப்பகத்தின் நோக்கங்களை மாணவர்கள் தமது கல்வி வாழ்க்கையில் முன்னேறுவதன் மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டுகிறார்கள்.
திரு.மகாதேவா அவர்கள் தமது பாடசாலைப் பணி முடிந்தவுடன் மாலை நேரங்களில் மாணவர்களிற்கு இலவசமாக கற்பித்து வந்தவர்; தமது மாணவர்கள் முன்மாதிரிகளாக, சமுக உணர்வு கொண்டவர்களாக விளங்க வேண்டும் என்பதை எப்பொழுதும் வலியுறுத்தி வந்தவர். இன்று அவரின் மாணவர்கள் அவரின் சொல்லை, அவரின் செயலை தொடருகின்றார்கள்.
இந்த முன்முயற்சிகள் தொடர வேண்டும். இன்னும் பல்கிப் பெருக வேண்டும். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களும், நமது குழந்தைகளின் வாழ்வில் அக்கறை கொண்டவர்களும் சேர்ந்து மகாதேவா படிப்பகத்தின் முயற்சிகளிற்கு தொடர்ந்து உதவி செய்வதன் மூலம் இப்பாரிய பணியை இன்னும் பெரிய அளவில் செய்ய உறுதி கொள்வோம்.
எவ்விடமேகினும் எத்துயர் நேரினும் எம்மன்னை நின்னலம் மறவோம்
மகாதேவா படிப்பக திட்ட ஒருங்கிணைப்பாளர்