நீயும் ஒரு நாயகனே !
கிறிக்கெற் விளையாட்டு இங்கிலாந்தில் தான் முதல் முதலாக விளையாடப்பட்டது என்று அநேகமானோர் கூறுகின்றார்கள்; அது உண்மையல்ல, கிறிக்கெற் இங்கிலாந்தில் விளையாடுவதற்கு கிட்டத்தட்ட எண்பது வருடங்களுக்கு முன்னரே பிரான்சில் விளையாடப்பட்டது என்று இன்னமும் பலர் நம்புகின்றார்கள். ஆங்கிலேயர் ஆட்சி பல்லாண்டுகளாக இலங்கையில் இருந்ததாலோ என்னமோ, ஆங்கிலத்தைப் போல் கிரிக்கெற்றும் இலங்கையர்களை ஆக்கிரமித்துக் கொண்டது. பிடித்த விடயங்களைப் பின்பற்றத்தான் நாம் ‘ஏன்’ என்ற கேள்வியைக் கேட்பதில்லையே, கிரிக்கேற்றும் அப்படிதான், கேள்வி ஏதும் கேட்காமலே நாம் சந்து பொந்து எங்கும் அந்த விளையாட்டை விளையாடத் தொடங்கி விட்டோம் !
மனிதர்களுக்கு இயற்கையாகவே விளையாட்டுகளில் ஈடுபாடும் ஈர்ப்பும் அதிகம், இலங்கையர்கள், குறிப்பாக தமிழர்கழும் இதற்கு விதிவிலக்கு அல்லர். ஆனாலும் அவர்களுக்கு, மற்றைய விளையாட்டுகளைப் போல், இந்த விளையாட்டில் இருந்த ஈர்ப்பும் கொஞ்சம் தயக்கம் கலந்ததாகவே இருந்தது, இதற்குக் காரணம் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களுக்குக் கூட நாட்டுக்காக விளையாட அங்கீகாரம் கிடைப்பது மிக மிக அரிதாகவே இருந்தது, அத்துடன் விளையாட்டுத்திறன் மூலம் நல்ல வாழ்வாதாரம் கிடைப்பதும் அவ்வளவு சாத்தியமாக இருக்கவில்லை. இதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ‘படி படி’ என்று அல்லும் பகலும் ஊக்குவித்தார்களேயன்றி கிறிக்கெற் ‘அடி அடி’ என்று அவ்வளவாக ஆதரவு வழங்கவில்லை! உதாரணத்துக்கு, எனது குடும்பத்தை எடுத்துக்கொண்டால், எனது அப்பா தனது பாடசாலைக்கு ஓரளவு திறமையாகக் கால்பந்து விளையாடியவர், எனது அம்மா தன் பாடசாலை அணிக்கு வலைப்பந்து விளையாடியவர். ஆனால், அப்பா தனக்குப் பாடசாலையில் கிடைத்த சில சிறு சிறு பாராட்டுகளைக் கூட வீட்டில் உள்ளோருடன் பகிரங்கமாகப் பகிர்ந்து சந்தோசப்பட முடியவில்லை, காரணம் அவரது தகப்பனாருக்கு அப்பா கால்பந்து விளையாடுவதில் துண்டாகவே விருப்பமிருக்கவில்லை. எனவே, அவருக்குத் தெரியாமல் தான் கால்ப்பந்தில் அப்பாவின் பங்கேற்பு இருந்தது, விளையாட்டு முடிந்து வீட்டுக்கு வரும் போது கூட அப்பப்பாவிற்குத் தெரியாமல் ஒழித்துப் பின்வழியாகத்தான் வருவதாகச் சொல்லுவார். இது கூடப் பறவாயில்லை, விளையாடும் போது வரும் பெரிய காயங்களை அப்பப்பாவிடம் இருந்து எப்படி மறைப்பது என்பது தான் தனக்கு அன்றிருந்த மிகப்பெரிய சவால் என்றார். சாதாரணமாக விளையாடுவதையே பெற்றோருக்கு ஒழித்துச் செய்ய வேண்டிய நிலை அன்று பல வீடுகளில் இருந்தது. புகழாரத்தைவிட பொருளாதாரதுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்த காலங்கள் அவை!
இப்படியெல்லாம் இன்னல்ப்பட்டு கால்ப்பந்து விளையாடிய எனது அப்பாவிற்கு, என்னைப் பந்துடன் கண்டால் கண்கள் சிவந்து, கோபம் தலைக்கேறிவிடும் ‘உன்னைவிட நான் பத்துமடங்கு திறமையாக விளையாடினனான், விளையாட்டு எனக்குச் சோறு போடேல்லை, உந்தப் பந்தை தூக்கி எறிஞ்சு போட்டு படிச்சு முன்னுக்கு வாற வழியைப் பார்’ என்று அவர் பல தடவைகள் கூறியது இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றது. அம்மாவும் அவரது பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசியதில்லை. சிறுவர்கள் விளையாட்டுகளில் பங்கேற்பதால், கல்வியிலும் அவர்களின் திறன் அதிகரிக்கின்றது எனப் பல ஆராச்சிகள் எடுத்தியம்பிய போதும், ‘உதெல்லாம் ஊருக்குத்தானடா உபதேசம், உனக்கில்லையடா மகனே’ என்ற நிலை தான் பரவலாக எங்கும் இருந்தது, படிப்பிற்கு பிறகு தான் எதுவும்!
நான் யாழ் இந்துக் கல்லூரியில் இணைந்த காலங்களில் தான் இலங்கைக்கு டெஸ்ட் கிறிக்கெற்அந்தஸ்து (Test Cricket status) வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் அநேகமான வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி(TV) இருக்கவில்லை, சில மாணவர்கள் இடைவேளைகளின் போது கையடக்க வானொலியில் கிறிக்கெற் ஆட்ட வர்ணனைகளைக் ஆர்வமாகக் கேட்பார்கள், அவர்களை ‘ஐஸ் கிரீம் வானை’ பின் தொடர்வது போல் வேறு பலரும் பின் தொடர்வார்கள். சிலர் ‘எப்படி மச்சான் மேட்ச் போகுது, எங்களுக்கும் சொல்லடா?’ என்று ஆக்கினைப் படுத்தினால், அவர்களுக்கு ‘டேய், Ian Botham, Cow Corner க் குள்ளாலை ஒரு நல்ல பவுண்டரி அடிச்சிட்டானடா’ என்பது போல் இக்கட்டாக எதாவது பதில்களைக் கூற, அவர்கள் Cow Corner ஐ கண்டுபிடிக்கவே மதிய இடைவேளை முடிந்துவிடும். நீங்களும் ‘பசு மாடு எப்படி கிறிக்கெற் மைதானத்தில் நுழைந்தது?’ என்று தலையை உடைக்க வேண்டாம். சுருக்கமாக சொல்வதென்றால் Cow Corner என்பது துடுப்பாட்ட வீரரிலிருந்து இடதுபக்க முன் பகுதியில், கிட்டத்தட்ட 45 பாகையில், எல்லைக்கோட்டை அண்டிய பகுதி, இந்தப் பகுதிக்குள் அநேகமாக பந்துகள் அடிக்கப் படுவதில்லை எனவே பசுக்களும் இடைஞ்சலின்றி அமைதியாக நிற்கலாம் என்பதால் Cow Corner என்று மைதானத்தின் இப்பகுதி அழைக்கப்படுகின்றது. இதற்கு வேறு சில விளக்கங்களும் உண்டு. கிறிக்கெற்றை விளையாடுபவர்கள் மைதானத்தில் தமது (Fielding) பீல்ட்டிங் நிலைகளைச் சரியாகத் தெரிந்திருப்பது நல்லது, இல்லையெனில் எங்காவது குத்துமதிப்பாக நின்று அவமானப்பட நேரிடும்.
கிறிக்கெற் செய்திகளை நான் யாழ் இந்துக் கல்லூரி நூலகத்தில் தான் வாசிப்பது அதிகம், அங்கே Sportstar என்று ஒரு சஞ்சிகை இடைக்கிடை வருவதுண்டு, அதைத்தான் அனேகமான மாணவர்கள் வாசிக்க அடிபடுவார்கள், இதில் வீரர்களின் படங்களைப் போட்டு அழகாகச் செய்திகளை எழுதியிருப்பார்கள். ஆங்கிலம் அவ்வளவு விளங்கா விட்டாலும், செய்தி கிறிக்கெற் தொடர்பாக இருப்பதால் ஓரளவு கஷ்டப்பட்டு விளங்கிக் கொள்வோம், உலக கோப்பையில் கபில்தேவ் சிம்பாபேக்கு(Zimbabwe) க்கு எதிராக அடித்த 175, அசாருதீன் முதல் மூன்று மேட்ச்களிலும் தொடர்ந்து அடித்த அசாத்தியமான சதங்கள், எண்பதுகளில் மேற்கிந்திய அணியினர் பாரபட்சம் பார்க்காது எல்லா அணிகளையும் துவம்சம் செய்தது, டெனிஸ் லில்லி (Dennis Lillee) குனிந்து வளைந்தபடி பந்து வீச ஓடி வரும் அழகு, அவரின் அபாரப் பந்து வீச்சு, நாளின் கடைசிப்பந்தில் அவர் மேற்கிந்திய வீரர் விவியன் ரிச்சர்ட்சின் (Vivian Richards) விக்கெற்றை வீழ்த்தியது, இப்படியான பல சுவராசியமான செய்திகளை அந்த நாட்களில் அறிவதற்கும், இந்த விளையாட்டில் எம் ஈடுபாட்டை அதிகரிக்கவும் உதவியது அன்று வந்த Sportstar போன்ற சஞ்சிகைகள் தான். பல விளையாட்டு வீரர்கள் விளையாடியதை நாம் நேரில் பார்க்க முடியாவிட்டாலும், இப்படியான சஞ்சிகைகள் மூலமாக நாங்கழும் அந்த வீர்ரகளாகவே வாழ்ந்த காலங்கள் அவை!
அந்த நேரங்களில் நாம் எம் கண்ணால் நேரில் பார்த்தது ரசித்தது யாழ்ப்பாண ப் பாடசாலைகளுக்கு இடையிலான கிறிக்கெற்றைத் தான், எனது நினைவுக் கெட்டியவரை, 1980 பதுகளின் ஆரம்பத்தில் யாழ் இந்துக் கல்லூரி கிறிக்கெற்றில் அவ்வளவாக ஜொலிக்கவில்லை, இதற்கு ஒரு காரணம் யாழ் மத்திய கல்லூரி, யாழ் பரியோவான் கல்லூரி அணிகள். அந்தக் காலங்களில் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டி மிகப்பெரிய போட்டியாக பலராலும் கருதப்பட்டதால் அது பல பார்வையாளர்களையும் தன்னகத்தே ஈர்த்துக் கொண்டது. அதனாலோ என்னவோ யாழ்ப்பாணத்தின் ஆட்ட நாயகர்களில் பலர் இந்தப் பாடசாலைகளில் இருந்தே உருவாகினார்கள். எனக்குத் தெரிந்த காலங்களில், பல வருடங்களாக, இந்த ஆதிக்கம் இருந்ததால், ‘ஜே.ஆர். ஜெயவர்த்தனா தான் எப்போதும் இலங்கையின் ஜனாதிபதியோ’ என்ற ஒரு பிரம்மை எனக்கு அன்று இருந்தது போல, இந்த அணிகளின் தொடர் ஆதிக்கமும் வாழ்வின் ஒரு சாதாரண நிகழ்வுதானோ என என் மனம் சிறிது சிறிதாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டது. ஆனால் நாங்கள் மத்திய கல்லூரி, பரியோவான் கல்லூரி நண்பர்களுடன் விவாதம் செய்யும் போது மாத்திரம் எமது கல்லூரி அணியை விட்டுக் கொடுப்பதில்லை, ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி எமது யாழ் இந்து அணிதான் மேலானது என்று, உண்மைக்கு மாறாக, பிதற்றிக் கொள்வோம். ஆனால் உள்மனதில், எமது பிதற்றலும் கனவுகளும் ஒரு நாள் உண்மையாகி விடாதா என்ற ஒரு நப்பாசையும் கூட!
எமது இந்தக் கனவுகளை நனவாக்கி, யாழ் மத்திய மற்றும் பரியோவான் கல்லூரிகளின் ஆதிக்கத்தை உடைத்து, இந்துக்கல்லூரி மாணவர்களாகிய எம்மையும் பெருமையுடன் தலை நிமிர்ந்து நடக்கவைத்தவர்கள் 1980 பதுகளின் பிற்பகுதியில், பத்தொன்பது வயதிற்கு கீழ்(U19) விளையாடிய அணிகள், இந்த அணிகளில் பல திறமையான வீரர்கள் இருந்தாலும் (எனக்கு தெரிந்தவரை) ஒருவரின் ஆட்டத் திறமை மிகவும் மேலோங்கி இருந்தது, அவர்தான் ‘அபி’ என அழைக்கப்படும் பிரபாகரன், இந்துவின் ஆரம்பப் பந்துவீச்சாளர், இந்துக் கல்லூரி பல ஆட்டங்களில் வெற்றி பெறுவதற்கு இவர் ஒரு முக்கிய காரணம். நாட்டில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக 1990 களில் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்த இந்த அணிகளில் இருந்த பலர், இங்கிலாந்தில், இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான கிறிக்கெற் போட்டிகளிலும் பல வெற்றிக் கிண்ணங்களை தட்டிச் சென்று எம்மெல்லோரையும் மகிழ்வித்தார்கள்.
நான் எனது பாடசாலை அணிக்கு விளையாடவில்லை, தகுதி காணாதென எனக்கு நானே சொல்லி மனதைத் தேற்றிக் கொண்டேன். இதற்கு பல காரணகள் உண்டு, ஆனால் முக்கிய காரணம் மேலே நான் குறிப்பிட்ட அணிகளில் விளையாடியவர்களின் அபாரத் திறமை, இவர்களின் திறமைக்கு என்னால் ஈடு கொடுக்க முடியாதென நானே யூகித்து முடிவெடுத்துத்துக் கொண்டேன். பாடசாலை அணிகளில் இடம்பெற நினைப்பது பல மாணவர்களின் கனவாக இருந்தாலும் சிலருக்குத் தான் அந்தப் பாக்கியம் கிடைக்கின்றது, அதுவும் யாழ் இந்துக் கல்லூரி போன்ற பெரிய கல்லூரிகளில் அது மிகவும் அரிது. வேறு பல மாணவர்களின் அனுபவத்தைப் போல, எனது கிறிக்கெற்றும் யாழ் இந்துக்கல்லூரி மைதான மதில்களுக்கும், மைதான வைரவர் கோவிலுக்கு அருகில் உள்ள மரத்துக்கும் தான் தெரியும்! டெனிஸ் பந்தில்(Tennis ball) தான் எனது அன்றைய கிறிக்கெற், Leather Cricket Ball ஐ தொட்டு விளையாடியதே சில தடவைகள் தான், கால்களுக்கு அணிய சரியான பாட்ஸ் (pads) இல்லாததால் இரண்டு பவுன்சில் பந்து போட்டு இரண்டடி எட்டினின்று தான் விளையாடுவோம். என்னுடன் எனது ஊர் கிறிக்கெற் அணிக்கு விளையாடிய இருவர் யாழ் இந்துக் கல்லூரிக்கு விளையாடினார்கள் என்பதை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சி! இங்கிலாந்துக்கு வந்ததால், இங்கு கிறிக்கெற் விளையாடி எனது கனவுகளில் சிலவற்றை நனவாக்கிக் கொண்டேன், இல்லையெனில், இலங்கையில் உள்ள பல மாணவர்களின் நிலை போல், எனது கிரிக்கெற்றும் டெனிஸ் பந்திலையே ஊரிலுள்ள மைதானங்களில் உருண்டு பிரண்டு உருக்குலைந்து போயிருக்கும்!
இலங்கையில் கிரிக்கெற் விளையாட்டைப் பொறுத்தவரையில், வீதிகளில் கிறிக்கெற் விளையாடியவர்கள் ஒரு வட்டம், தமது ஊர் அணிக்கு விளையாடியவர்கள் இன்னொரு வட்டம், படித்த பள்ளிக்கூடத்துக்கு விளையாடியவர்கள் இன்னொருவட்டம், ‘இவங்கள் இலங்கை அணிக்கு விளையாடத் தகுதியுண்டு’ என நாம் நினைப்பவர்கள் இன்னொரு வட்டம், இவர்கள் எவரையுமே தெரியாமல் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் இன்னொருவட்டம், எனப் பல வட்டங்களாகப் பிரிக்கலாம். மாணவர்கள் எல்லோருக்கும், ஒவ்வொரு படியாக உயந்து, அதி உயர் நிலையை அடையவேண்டும் என்ற கனவு இருந்தாலும், வெறும் கனவுகளைக் காண்பதோடு மட்டும் நின்றுவிடாமல்,களத்தில் இறங்கி, வரும் தடைகளை ஒவ்வொன்றாய் விலக்கி, உங்கள் இலக்கை அடைய முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். நான் செய்தது போல் ‘எனக்கு தகுதியில்லை’ என்று நீங்களாகவே உங்களைத் தெரிவிலிருந்து விலக்கியோ, ‘தந்தை சொன்னது தான் மந்திரம்’ என்று உங்களைத் தாழ்வாக நினைத்தோ, உங்கள் தரத்தைக் குறைத்து விடக்கூடாது. உண்மையிலேயே உங்களுக்குத் திறமையும் தகுதியும் இல்லாவிடினும், ‘எனக்குத் தகுதியில்லை’ என்ற முடிவை நீங்கள் எடுக்காதீர்கள், அதை விளையாட்டு அணிகளுக்கு வீரர்களைத் தெரிவு செய்யும் ‘தெரிவுக் குழுக்களிடம்’ விட்டு விடுங்கள். உங்களுக்கே தெரியாத உங்களின் சில திறமைகள் அவர்கள் கண்களுக்குத் தெரியலாம் அல்லவா? எமது கனவுகளை நாமே முளையில் வெட்டியெறிவது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்?
விளையாட்டில் ஒவ்வொரு படியும் உயரச் செல்லச் செல்ல போட்டியும் தீவிரமாக இருக்கும், எனவே எல்லோரும் எல்லா மட்டத்திலும் பங்கேற்பது என்பது சாத்தியமில்லை, அதனால் மனதைத் தளரவிட்டு சந்தோசத்தைத் தொலைக்காது, உங்கள் திறமைக்கும், நிலைமைக்கும் ஏற்ப சரியான ஆடுகளத்தை தேர்ந்தெடுத்து, உங்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்துவீர்களெனில், உங்களைச் சுற்றியுள்ள, உங்களைப் போன்ற பலருக்கு நீங்களும் ஒரு நாயகன் ஆகலாம்!
அன்புடன்
கனகசபேசன் அகிலன்