திரு வல்லிபுரநாதன் தீபராஜ்
மீளாத்துயிலில் தீபராஜ்….!
யாழ் இந்துக் கல்லூரி அன்னை, லண்டனில் இன்று (25/06/2015) தன் இளம் புதல்வனான அமரர் வல்லிபுரநாதன் தீபராஜ் ( க.பொ.த 92 )அவர்களை இழந்து தவிக்கின்றது. யாழ் வேலணை புளியங்கூடலை பிறப்பிடமாகவும் , பிரித்தானியாவில் ஹறோ பகுதியில், தன் அன்பு மனைவி,அருமை புதல்வர்கள் இருவருடன் வாழ்ந்து வந்தார். சிறு வயதுமுதல் அபார கிரிக்கெட் ரசிகனாகவும், வீரனாகவும் தன்னை லண்டனில் அறிமுகப்படுத்தினார் தீபராஜ். யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க பிரித்தானியக்கிளையின் நீண்டகால உறுப்பினரான ராஜு, 1990களில் சங்கத்தின் கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட குழுக்களுடன் இணைந்து இந்துவின் பல வெற்றிகளுக்கு காரணமான வீரர்களில் இவரும் ஒருவர். 1994ம் ஆண்டில், யா.இ.க.ப.மா.சங்க கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கிய பெருமைக்குரியவர், பின்னைய நாட்களில் கல்லூரி பங்குபற்றும் போட்டிகளில் பார்வையாளனாக இருக்கின்ற பொழுதிலும் இந்துவின் நீல வெள்ளை கொடிகளுடன் பாடசாலையின் வெற்றிக்காக இலட்சிய வெறியுடன் மைதானங்களில் வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டும் ஒரு “இந்துவின் மைந்தனை” கல்லூரிச் சமூகம் இழந்து நிற்கின்றது. அன்னாரின் துயரபிரிவினால் கவலையுற்றுத் தவிக்கும் அன்பு மனைவி, அருமை புதல்வர்கள், குடும்பத்தினர், நண்பர்களுக்கும் எம், யா.இ.க.ப.மா.ச(ஐ.இ) நிர்வாக குழு மற்றும் இந்துக் கல்லூரிச் சமூகம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் “இந்துவின் மைந்தனின்” ஆத்மா சாந்தியடைய எம் அனைவரினது பிரார்த்தனைகளும். “மீளாத்துயில் கொள்ள சென்ற தீபராஜே….! நீங்காத உன் இந்து நினைவுகள் எம் மனதை என்றும் நெகிழ வைக்கும்”
யா.இ.க.ப.மா.ச(ஐ.இ)
25 ஆனி 2015.