“சிவராமலிங்கம் ஞாபகார்த்த நூலகம்” திறப்பு விழா
இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட “சிவராமலிங்கம் ஞாபகார்த்த நூலகம்” மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் பூசைகள் நடைபெற்று பின் அங்கிருந்து இறைவனின் திருவுருவ படங்களை புதிதாக அமைந்த கட்டட தொகுதியில் வைத்து, பால் காய்ச்சி குறித்த நிகழ்வானது சம்பிரதாய பூர்வமாக இனிதே ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் பின்னர் விருந்தினர்கள் அனைவரும் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயிலில் இருந்து மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர். இதனை தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட நூல் நிலையத்தின் கல்வெட்டானது யாழ் இந்துவின் ஐக்கிய இராட்சிய பழைய மாணவர் சங்க தலைவர் சபா சுகந்தன் அவர்களினால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் “சிவராமலிங்கம் ஞாபகார்த்த நூலகத்தினை” கடந்த க.பொ.த உயர்தர பரீட்சையில் கணித பாடத்துறையில் தோற்றி அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவனான செல்வன். பா.டாருகீசனினால் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது. பின்னர் புதிதாக அமைக்கப்பட்ட நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி அதிபரது உரையும், ஐக்கிய இராட்சிய பழைய மாணவ சங்கத் தலைவர் சபா.சுகந்தனுடைய உரையும் நடைபெற்றன. அத்துடன் முன்னாள் ஆசான் ஆன சிவராமலிங்கம் அவர்களுடைய உருவப்படத்துக்கு அவருடைய பேர்த்தியும் அவர் தம் துணைவரும் ஆன திரு.திருமதி சர்வேஸ்வரா தம்பதியினரால் மாலை அணிவிக்கப்பட்டது. இந் நூலக திறப்பு விழாவில் ஐக்கிய இராட்சிய பழைய மாணவ சங்கத்தினரால் ஒரு தொகுதி நூல்களும் கல்லூரிக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது. ஐக்கிய இராட்சிய பழைய மாணவ சங்கத்தினரால் 125 ஆவது ஆண்டு விழாவினை முன்னிட்டு “இந்துவின் அறிவு பாலத்தின்” திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு இலவசமாக அப்பியாச கொப்பிகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வின் போது ஐக்கிய இராட்சிய பழைய மாணவர் சங்கத்தினரால் கல்லூரியில் உள்ள கட்டடத்துக்கு தேவையான முழுமையான தளபாட வசதிகளை எதிர்காலத்தில் செய்து தரவுள்ளதாக சங்கத்தின் தலைவர் சபா.சுகந்தன் தெரிவித்தார். இந் நிகழ்வில் அதிபர், உப அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.