Menu

சித்திரைத் திருவிழா 2015

யாழ் இந்துக்கல்லூரியின் 125 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர் சங்கம் பல நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமாகவும் “சித்திரைத் திருவிழா” எனும் கலை விழாவினை 18.04.2015 அன்று வெம்பிளி, அல்பேர்ட்டன் சமுதாய பாடசாலையில் வெகு சிறப்பாக வழங்கினார்கள். யாழ் இந்துவின் மைந்தர்களின் புதல்வர்களும், புதல்வியரும் பாட்டும், பரதமும், பண்ணும் கலந்து கலைவிருந்து படைத்தார்கள்.

சித்திரைப் பொங்கல் பொங்கிப் படைத்து, செல்வி சிந்து பசுபதி, செல்வி சுகனி சுகந்தன் கொடுத்த அறிமுக உரையுடன் விழா தொடங்கியது. மண்ணில் நல்ல வண்ணம் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்யப்பட்டு மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டது. செல்விகள் பைரவி கிரிதரன், ஆர்த்திகா பார்த்திபன், அக்சஜா கார்த்திக், அவாந்திகா கார்த்திக் தேன்தமிழில் தேவாரப்பண் பாடினார்கள். எங்கள் உயிரின் உயிரான தமிழ்த்தாயை சுகனி வாழ்த்திப் பாடினார். தர்ச்சனா, லக்சனா, துளசி, சுகனி, ஜனனன், அபிராமி, மெலனி, திலக்சன், லக்சினி, விதுர்சா, பிரசன்னா, சுகந்த், சரண் சேர்ந்து இசைத்த யாழ் இந்து அன்னையின் கல்லூரிக்கீதம் காற்றுவெளி எங்கும் கலந்தது.

ராதவி, யுகன், சாதனா, வாசினி என்னும் சின்னஞ்சிறு கிளிகள் வரவேற்புரை, திருக்குறள், இளமையில் கல், என் அம்மா என பைந்தமிழில், பழகுதமிழில் பேசிச் சென்றனர். பிரித்தானியாவில் பிறந்து ஆங்கிலமொழிச் சூழலில் வளர்ந்தாலும் நம் தமிழை நாளைய தலைமுறை எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கையை இவை போன்ற நிகழ்வுகள் உறுதி செய்கின்றன.

லக்சினி, வைஷ்ணவி, சினேகா, துர்க்கா என்ற இளைய சரஸ்வதிகளின் விரல்கள் வீணையை மீட்டின. சுபிகாவின் கிட்டாரும்; அபிசகன், சஜீவ்வின் மிருதங்கமும் வீணையின் வழி நடந்தன.நேத்திராவின் வயலினில் இளைய நிலா பொழிந்தது. பீஷ்மனின் புல்லாங்குழல் கண்ணனை தூங்க வைக்க மாறன், யனுசனின் வயலின்களும், சரணின் கிட்டாரும், பவனின் கீ போர்ட்டும் சேர்ந்து தாலாட்டுப் பாடின. பிரவீனின் முரசமும்; ராகுல்ராம், கரிராம், சஜீவ்வின் மிருதங்களும் சேர்ந்து தாளம் போட்டன.

லடீஸ் வீரமணியின் இசையில் மகாகவி உருத்திரமூர்த்தியின் கவிதை வரிகள் இனிய தமிழ் பாடலாக இசைத்த “சிறு நண்டு படம் ஒன்று கீறும்” கடற்கரைக் காட்சியும்; யாழ் கண்ணனின் கானமழையில் நீலாவணனின் தீந்தமிழ்ப்பாட்டு, மாணிக்கம் சத்தியமூர்த்தி அவர்கள் தன் மதுரக்குரலில் பாடிய “ஓ வண்டிக்காரா” என்ற புதிய நகரம் நோக்கிப் புறப்பட்ட பூம்புனலும் சிந்து பசுபதி, பிருந்தா பிரபாகரன் என்ற கானக்குயில்களின் குரலில் ஈழதேசத்தின் வாசத்தை மண்டபம் எங்கும் வீசிச் சென்றது. இவர்கள், நாடகக் கலைஞரும், இந்துவின் பெருமை மிகு மைந்தனுமாகிய கா.பாலேந்திராவின் “கான சாகரம்” நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்குபற்றுபவர்கள் என்பதை இங்கு பதிவு செய்வது சாலப்பொருத்தம். பவன், பிரவீன், சரண் கடற்கரைக் காற்றையும், மாட்டு வண்டியின் மணி ஓசையையும் கவிதை வரிகளிற்குள்ளே கலந்து இசைத்தார்கள்.

அக்சயா, அவந்திகா, யாதவி, ஆரணி, வாசினி, சுஜிதா தமிழ்த்திரைப்பட பாடல்களிற்கும் வைஷ்ணா, தபன்யா மாற்றுமொழிப்பாடலிற்கும் நடனம் ஆடினார்கள். வசந்த உற்சவம் என்ற கதையும், களிநடனமுமான கதக்களியை கொஞ்சும் மலையாளப் பாடலுடன் சைலஜா, அஞ்சனா, ரோசினி, காஜல், பிருந்தா, நிவேதா என்ற மயில்கள் தோகை விரித்து நடமாடினார்கள். சரஸ்வதி துதி என்ற பாரதி பாடலை சரண்யாவும், சைலையாவும், பாட்டும் பரதமும் சேர்த்து வழங்கினார்கள். கரிணி தனி நடனம் ஒன்றை அபிநயம் பிடித்து அரங்காடினார்.
சபா சுகந்தனின் தலைமை உரையில் பழைய மாணவர் சங்கத்தின் பணிகளை குறிப்பிட்டு பேசினார். அதையடுத்து யாழ் இந்துக் கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தினரால் முல்லைத்தீவு தண்டுவானில் “மகாதேவா படிப்பகம்” என்று மறைந்த ஆசிரியர் மகாதேவா அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தப்படும் கல்விப்பணிகளிற்காக பரிசுச்சீட்டுகளின் மூலம் நிதி சேகரிக்கப்பட்டது. எவ்விடமேகினும் எத்துயர் நேரினும் எம்மன்னை நின்னலம் மறவோம் என்று கல்லூரித் தாயை பாடும் அவளின் புதல்வர்கள் போரின் கொடுமையினால் துயர்மிகு வாழ்வு சுமத்தப்பட்ட எமது குழந்தைகளின் நலம் வேண்டிச் செய்யும் கல்விப்பணி இது.

திருமதி வினோதினி பரதனின் மாணவர்கள் தர்ச்சனா, லக்சனா, கபீதா, சரண்யா, துலசி, கர்சினி, சோபனா, கெளசலா, சுகனி, அபிராமி, மெலனி, சலோமி, யனனி, திலக்சன், சசிகுமார், விதுர்சா, பிரசன்னா, சுகந்த், சரண், அசோத்மன், பிரவீன், யனனன் வாத்தியங்கள் முழங்க ராகமழை பொழிந்தார்கள். இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் பரதனின் புதல்வி, நாட்டியக் கலாஜோதி, நாட்டிய சுகுணா செல்வி பார்க்கவி பரதனின் நெறியாள்கையில் “சிந்துரல்லா” நாட்டிய நாடகம் அரங்கேற்றப்பட்டது. கர்சனா, கிஸ்னவி, சாகரி, ராகவி, லம்போதரா, கெளசிகா, லக்ஸ்மன், ராகுலன், சோபிகா, திஸ்யா, தனுசா, ராஜிதா, கமிஸ்கா, நிலக்சி, அக்சனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவின் மிக முக்கியமான நிகழ்வாக திருமதி சிவபாக்கியம் நவரட்னராஜா என்னும் யாழ் இந்துக்கல்லூரியின் முதலாவது பழைய மாணவிக்கு மரியாதை செய்யும் மறக்க முடியாத நிகழ்வு நடைபெற்றது. ஆம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி என்னும் ஆண்கள் பாடசாலையில் பெண்களும் படித்திருக்கிறார்கள். இவ்வருடம் தொண்ணூற்றைந்து வயதில் காலடி எடுத்து வைக்கும் திருமதி சிவபாக்கியம் நவரட்னராஜா அவர்கள் 1937 ஆம் ஆண்டு யாழ் இந்துவில் சேர்ந்த முதலாவது மாணவி. இலங்கையில் பல பாடசாலைகளில் கற்பித்த அவர் பின்பு பிரித்தானியாவில் அல்பேர்ட்டன் தமிழ்ப் பாடசாலையை தொடங்கி தமிழையும், கவின்கலைகளையும் தமிழ்க்குழந்தைகளிற்கு தந்தார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. தமது கல்விப்பணிகளிற்கு யாழ் இந்துக்கல்லூரியில் தான் கற்ற கல்வியும், சமுதாயச் சிந்தனையுமே அடித்தளமாக இருக்கின்றன என்பதை அவர் பெருமையோடு குறிப்பிட்டார்.

செயலாளர் திரு.கிருபாகரன் நன்றியுரையைத் தொடர்ந்து நிகழ்வுகளை வழங்கியவர்களை கெளரவித்து ஞாபகார்த்த விருதுகள் வழங்கப்பட்டன. தமிழரெம் வாழ்வினிற் தாயென மிளிரும் எம் இந்துக் கல்லூரி அன்னையின் தாள் பணிந்து கல்லூரிக்கீதம் பாடி “சித்திரைத் திருவிழா” நிறைவு பெற்றது. இந்துவின் மைந்தர்களால் ஒழுங்கு செய்யப்பட்டு அவர்களின் புதல்வியரும், புதல்வரும் பண்ணும், பாட்டும், பரதமும் பைந்தமிழில் செய்த திருவிழா எதிர்வரும் காலங்களிற்கு ஒரு முன்னுதாரணம் என்பதை நாளைய நாட்கள் எடுத்துச் சொல்லும்.