Menu

கேளுங்கள் கொடுக்கப்படும்……….

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, 1985 ம் ஆண்டு, நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள் எமது வகுப்புக்கு ஏதோ காரணத்துக்காக ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர் வரவில்லை. எமக்கோ பெரும் சந்தோசம். வகுப்பு கோழிப்பண்ணை போல் ஆகி விட்டது, ஒரே சத்தம்! அருகில் இருக்கும் வகுப்புகளின் ஆசிரியர்கள் வந்து எவ்வளவோ சொல்லியும் நாம் அடங்குவதாக இல்லை. சிறிது நேரத்தில் ஒரு மாற்று ஆசிரியர் வகுப்புக்கு வந்தார், வந்து சும்மா தனது கதிரையில் இருந்தார், அவர் வந்தது படிப்பிக்கவல்ல, எம்மை மேய்ப்பதற்காக! சத்தம் குறைந்து விட்டது ஆனால் அப்பவும் கொஞ்சச்சத்தம் வந்து கொண்டேயிருந்தது. “உங்களுக்கு இப்ப என்ன பாடமாடா?” என்று ஆசிரியர் கேட்டார். ” ஆங்கிலம் சேர் ” என்று எல்லோரிடமிருந்தும் பதில் பெரும் ஒலியாக எழும்பியது. ஆசிரியர் சொன்னார் “சரி, நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம் ஆனால் ஒரு நிபந்தனை; நீங்கள் ஆங்கிலத்தில் மட்டும் தான் பேச வேண்டும் “. அவர் பேசி முடிகவுடனேயே வகுப்பு மயான அமைதியாகிவிட்டது ! கல்யாண பெண்கள் போல் எல்லோர் முகத்திலும் ஓர் புன்முறுவல்; ஒருவனை பார்த்து ஒருவன் சிரிப்பவனும், குனிந்த தலை நிமிராமல் அன்று தான் புதிதாக கண்ட மேசை போல, வைத்த கண் வாங்காமல் அதை பார்த்தபடி விரல்களால் வருடுபவனும், கூரையை காதலிப்பவனும், ஒன்றுமே எழுதாத கரும்பலகைக்கு கண்ணடிப்பவனுமாக, எல்லோரும் எப்படியோ மௌனமாகி விட்டார்கள். ஒருவன் மாத்திரம் துணிவாக ஆசியருடன் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேசத்தொடங்கினான், உடனே வகுப்பறையில் ஏளனச்சிரிப்பு “இவருக்கு ஏதோ பெரிசா தெரியுமாகும்” என்பது போல். உடனே வெக்கத்தில் அவனும் பேசுவதை நிறுத்திவிட்டான். ‘வைக்கல் பட்டறை நாய்’ போல் தான் பலர் வாழ்க்கை. மற்றவனை பார்த்து நாமும் முன்னேறுவோம் என்பதை விட்டு விட்டு, முன்னேறுபவனையும் பின்னே இழுத்து எம்மோடு வைத்திருப்பதில் ஏனோ ஒரு அலாதிப்பிரியம்!

பாடசாலை காலங்களில் எனக்கும் என்னை போன்ற பல மாணவர்களுக்கும் ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது மானப்பிரச்சனை, தெரியாததை கேட்டால் மற்றவர்கள் எம்மை ‘இது கூட தெரியாத முட்டாள்’ என நினைப்பார்களோ, கேலி செய்வார்களோ என்ற தாழ்வு மனப்பான்மை. ஏதோ பிறக்கும்போதே எல்லாம் தெரிந்து கொண்டே வந்த மகாத்மாக்கள் என்ற நினைப்பு ! தெரியாததையும், இல்லாததையும் வாயை திறந்து கேட்க வேண்டும், அப்படி கேட்பவன் அந்த நொடியில் மாத்திரம் மட்டுமே முட்டாளாக தெரிகிறான், கேட்காதவர்கள் வாழ்நாள் முழுவதுமே முட்டாள்களாக இருந்து இறந்து விடுகிறார்கள். எனவே தெரியாததை துணிவுடன் கேளுங்கள், மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று நினைத்து பயந்து ஒடுங்கிவிடாதீர்கள். தெரியாததை கேட்டு அறியாமல் இருப்பது முட்டாள்தனத்தினதும், கேட்டு அறிந்து கொள்வது புத்த்திசாலிதனத்தினதும் அறிகுறி!

இன்னுமொரு விதமான மாணவர்களும் அங்கு இருந்தார்கள், தமக்கு தெரிந்ததை மற்றவர்க்கு சொல்லாமல் தம்முடனேயே மறைத்து வைத்திருக்கும் மாணவர்கள். ஆர்க்கிமிடீஸ்(Archimedes) க்கு அடுத்தபடியாக தாங்கள் தான் யுரேக்கா(eureka) சொல்ல போவது போல, எப்பவும் ஒரு மாதிரியாகவே இருப்பார்கள் (https://www.youtube.com/watch?v=0v86Yk14rf8). அப்படி அவர்கள் செய்வதற்கு காரணம், தமக்கு தெரிந்ததை சொல்லி கொடுத்தால் மற்றவன் தன்னைவிட கூட புள்ளிகளை எடுத்து முன்னேறி விடுவானோ என்ற பயமும், குறுகிய மனப்பான்மையும்! அவர்களிலும் பிழையில்லை, ஏனேன்றால் எமது கல்வி திட்டமும், அதன் அமைப்பும் போட்டியை மையப்படுத்தி, எவனை எப்படி மடக்கலாம், என்பது போல் தானே அமைந்திருக்கிறது.

எது எப்படியிருந்தாலும், நாம் கிணற்று தவளைகள் போல், நானே ராஜா என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு, எமது திறமையை ஒரு குறுகிய வட்டத்துக்குள் காட்டிக்கொண்டு இருந்துவிடக்கூடாது, எமது போட்டி பொறாமையெல்லாம் எம் நீண்டகால வளர்ச்சிக்கு உதவாது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும், அறிவை பகிர்ந்து கொள்ள பழக வேண்டும், எம் கண்ணுக்கு தெரிபவர்கள் எமது பாடசாலையிலோ அல்லது எமது சமுதாயத்திலோ உள்ள சிலர் மாத்திரமே, எமக்கு தெரியாத உலகம் மிகப்பெரிது! எமது அறிவும், ஆற்றலும், போட்டியும், உலகளாவியரீதியில் இருக்க வேண்டுமென்றால் எமக்கு தெரிந்ததை பலருடனும் பகிர்ந்துகொண்டு, முதலில் எம்மை சுற்றியுள்ளவர்களையும், எமது சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும், ஒவ்வொரு முறையும் நாம் அறிவை பகிராது மூடி மறைக்கும் போது எமது சமுதாயம் ஒரு படி பின்தங்கி விடுகிறது.

எனவே உங்களுக்கு அருகில் இருப்பவனை உங்கள் போட்டியாளனாகவோ, பகைவனாகவோ நினைக்காது, ஒரு நண்பனாக நினைத்து அவனுடன், அன்பையும், அறிவையும் பகிர்ந்து கொள்ளுங்கள், அவன் முனேற்றத்துக்கு உதவுங்கள், அவனையும் உங்கள் அளவிற்காவது ஒரு அறிவாளியாக்குங்கள்! நாளை உங்கள் வரவை நோக்கி அவன் வழிமேல் விழிவைத்து காத்திருப்பான், உங்களை இன்னொரு படி உயர்த்திவைத்து அழகு பார்ப்பதற்காக!

“We are all here on earth to HELP others, what on earth the others are here for I don’t know!”

அன்புடன்
கனகசபேசன் அகிலன்
 – 89 A/L