Menu

இந்துவின் 125ம் ஆண்டு பெருவிழா…….

யாழ்பாணத்தின் அடையாளம் என்று சொல்லப்படுகின்ற யாழ் இந்துக் கல்லூரியின் 125ம் ஆண்டு நிறைவு விழா எத்தனையோ கல்விமான்கள் அறிஞர்கள் விஞ்ஞானிகள் சமூக சேவையாளர்கள் பண்பாளர்கள் சமய அறங்காவலர்கள் என்று 125 ஆண்டுகளாக வார்த்தும் வளர்த்தும் எடுத்தும் எடுத்துக்கொண்டு இருக்கின்ற பாடசாலையின் 125ம் ஆண்டு விழா அது யாழ்பாணத்தின் திருவிழா என்றால் மிகையாகாது. ஆம் வருணபகவானும் சூரியபகவானும் சங்கமிக்கும் மாதமான புரட்டாதியில் குடாநாட்டிலே அதிலும் யாழ்ப்பாண நகரத்திலே மெல்லிய சாரல் உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம்! நான்கு தினங்களாக எம் அன்னையவளுக்கு அலங்காரத்திருவிழா. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெற்ற அன்னையவளின் 125ம் ஆண்டு நிறைவு விழா பற்றித் தான் நாம் இங்கு குறிப்பிட விளைகின்றோம். இந்த 125ம் விழா பற்றிய அழைப்பிதழ் கிடைத்ததுமே எம்முள் ஓர் பேரவா, எமது பாடசாலை ஆம்…, எம் அன்னைக்கு பெருவிழா, இதில் நாம் எப்படியாவது இந்த நான்கு நாள் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என்பதே அது. அழைப்பிதலினுள் அடங்கியுள்ள நிகழ்ச்சிகளின் கவர்ச்சி, ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஓரத்திலிருந்தாவது பார்க்க வேண்டும் என்று தூண்டியது.

அன்னையவளின் விழாக்காக அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்,பழையமாணவர்கள், பெற்றோர்கள் என எல்லோரும் ஒருமித்து யாழ்நகரத்தையே விழாக்கோலமாக்கியிருந்தார்கள். யாழ்நகரின் பிரதான வீதிகள் மற்றும் பிரதான சந்திகள் எங்கும் விழா வாழ்த்துக்களும் நிகழ்சிகளின் விளம்பரம்களும் காணக்கூடியதாக இருந்தது. வீதியால் செல்லும் வாகனங்களிலும் 125ம்  ஆண்டிற்கான வாழ்த்து ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டு காணப்பட்டது இலங்கையின் பிரபல்யமான தமிழ் மற்றும் ஆங்கில நாளேடுகளில் வாழ்த்துக்களும் விழா அழைப்பிதழ்களும் விழா பற்றிய செய்திகளும் அவ்வாரம் முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தன. சமூக வலைத்தளங்களில் பாடசாலையின் 125ம் ஆண்டு இலட்சனையும் 125ம் ஆண்டு நினைவுகளின் பதிவுகளும் ஆக்கிரமித்திருந்தன. கே கே எஸ் வீதி கல்லூரி வீதி, கஸ்தூரியார் வீதியெங்கும் வீதிக்கு குறுக்காக வெற்றிக்கொடிகளும், வீதியின் இரு மருங்கிலும் அலங்கார மின்சார விளக்குகளும் அத்தோடு பாடசாலை கொடிகளும் கம்பீரமாக பறந்து கொண்டு இருந்தன.  வண்ணார்பண்ணையே  நீல வெள்ளை வர்ணத்தினால் முலாம் பூசப்பட்டிருந்தது. கல்லூரி வளாகமெங்கும் அலங்கார மின்சார தோரணங்களும், விசேடமாக விழா மண்டபமும் மின்னொளியில் கல்லூரியை அலங்கரித்து கொண்டு இருந்தன. கடந்த10 மாதங்களாக உலகெங்கும் உள்ள யாழ் இந்து பழைய மாணவர் சங்கங்களால் அன்னையின் 125ம் ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட நிகழ்வுகளின் உச்சக் கட்டமாக கல்லூரியில் ஒருவாரமாக நடைபெறவுள்ள விழாவிற்காக உலகெங்கும் இருந்து வரவுள்ள தன் மைந்தர்களை வரவேற்க கல்லூரித்தாய் தயாராகிக்கொண்டிருந்தாள்.

இந்துவின் மைந்தர்கள் யாவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்நாளும் வந்தது. செப்டம்பர் 22 ஆம் திகதி காலை  9 மணிக்கு ஐக்கிய இராச்சியத்தின் இந்துவின் மைந்தர்களான திரு சா ஜெயப்பிரகாஷ், திரு சா சந்திரப்பிரகாஷ் சகோதரர்களின் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்ட ‘C’ மற்றும் ‘D’ கட்டிடத்தொகுதி திறப்புவிழா பெருந்திரளான இந்துவின் மைந்தர் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் மாலை 5 மணிக்கு இந்துக்கல்லூரி ஸ்தாபகர்கள் நினைவு நிகழ்வு இடம் பெற்றது.

செப்டெம்பர் 23ம் திகதி காலை 8 மணிக்கு கல்லூரி வளாகத்தில் வீற்றிருக்கும் ஞானவைரவர் ஆலயத்தில் விசேட பூஜைகள் நிறைவுற்றதும் மாணவர்கள் ஆசிரியர்கள் பழையமாணவர்கள் எல்லோரும் மைதானத்தில் ஒன்றுகூடி  யாழ்பாணத்தின் மிகப்பெரும் நடைபவனிக்கு (இந்து நடைபவனி – HINDU WALK) ஆயத்தமாகிக் கொண்டு இருந்தனர். அந்த மைதானமே நீல வெள்ளையாக நிறைந்திருந்தது. ஆம் 125ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவனிக்காகவே பழைய மாணவர்களால் சிறந்த மற்றும் அழகாக வடிவமைக்கப்பட்ட ரீ சேட் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருந்தது. பழைய மாணவர்களும் பணம் செலுத்தி வாங்கி அணிந்திருந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த நீலம் வெள்ளை ரீசேட் ஆனது மைதானத்தையே அழகாக்கியது.  யாழ்பாணத்தில் இது வரை யாரும் கண்டிராத அளவில் ஏற்பாட்டாளர்களின் ஏற்பாடுகள் காணக்கூடியதாக இருந்தது. காலை 8 மணிக்கு பாடசாலை மைதானத்தில் ஆரம்பித்த இந்து நடை (HINDU WALK) ஆனது யாழ்ப்பாணத்தில் இதுவரை வரலாறு காணாத ஒன்றாக அமைந்திருந்தது. ஏறத்தாழ 4000 பேர் வரையில் பங்குபற்றிய இந்நடைபவனியில் யாழ் இந்து அன்னையின் நீல வெள்ளை கொடியினை ஏந்தியவண்ணம் மாணவ முதல்வன் குதிரையில் கம்பீரமாக முன் செல்ல பின்னால் அலையலையாகமாணவர்கள், பழையமாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என நீல வெள்ளை உடையிலும் மாணவ குழுக்கள் தத்தமது சீருடையிலும், தொடர்ந்து வாகன ஊர்திகள் மயிலாட்ட ஒயிலாட்ட குழுக்கள் என யாழ் நகர பிரதான வீதிகளுக்குடாக சென்ற ஏறத்தாழ 3 km நீளமான இந்நடை பவனியானது இந்திர விழா என எல்லோராலும் புகழப்பட்ட இந்து அன்னையின் 125ம் ஆண்டு, நிறைவு விழாவின் அடுத்து வரப்போகும் 3 நாள் கலை விழாவையும் முழு உலகிற்கும் கட்டியம் கூறுவது போல இருந்தது.

அன்றைய தினம் மாலையில் 125ம் ஆண்டு நிறைவை முன்னிட்ட நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியும் இரவு மின்னொளியில் பழைய மாணவர்களுக்கிடையிலான சிநேகபூர்வ துடுப்பெடுத்தாட்டப் போட்டிகளும் சிறப்பாக இடம்பெற்றன.

125ம் ஆண்டு நிறைவு கலை நிகழ்வுகள் மூன்று நாள்கள் காலை மாலை என இரு அமர்வுகளாக நடைபெற்றன. ஒவ்வொரு அமர்விற்கும் உலகம் எங்கும் பரந்து இருக்கும் யாழ் இந்து பழைய மாணவ சங்க தலைவர்கள் தலைமை தாங்கினார்கள். பிரதம விருந்தினராக புகழ் பூத்த மேதைகள் கலந்து சிறப்பித்தனர். இவர்கள் தவிர விழா தலைவர் அதிபர் திரு. ஐ தயானந்தராஜா,  விழா இணைப்பாளரும்  பழையமாணவருமான திரு.ஸ்ரீரங்கா, உலகெங்கும் இருந்து கலந்து  கொண்ட பழையமாணவர்கள் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும்  கல்லூரிமாணவர்கள் ஒவ்வொரு நிகழ்வையும் மண்டபம்நிறைந்து கலந்து சிறப்பித்தனர்.

முதலாம் நாள் காலை அமர்வு நிகழ்வுகள்அதாவது செப்டெம்பர் 24ஆம் திகதி வியாழக்கிழமை 8.30 மணிக்கு விழாவின்  பிரதமவிருந்தினராக மாண்புமிகு கல்வி அமைச்சர் கெளரவ அகில விராச் காரியவசம் அவர்கள் கொழும்பில் இருந்து விசேட உலங்கு வானூர்தி மூலம் பாடசாலை மைதானத்தில் தரை இறங்கினார். இவருடன் சிறப்பு விருந்தினராக மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஐயகலா மகேஸ்வரன் அவர்களும் வந்தடைந்தனர். விருந்தினரை அதிபர், இணைப்பாளர், மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனகே கே எஸ் வீதி வழியாக கல்லூரிக்கு மங்கள வாத்தியங்களுடன் அழைத்து வருகை தந்து கல்லூரி வளாகத்தில் வீற்றிருக்கும் ஞானவைரவர் ஆலயத்தில் விசேட பூஜைகள் நிறைவுற்றதும் விருந்தினர்கள், கல்லூரியின் பாண்ட் வாத்தியத்துடன் விழா மண்டபத்திற்க்கு அழைத்து வரப்பட்டனர். மண்டபத்தில் முதல் நிகழ்வாக மங்கள வாத்திய இசை நிகழ்வு இடம்பெற்றது. அதை தொடர்ந்து வருகைதந்த விருந்தினர்கள், அதீதிகளின் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து இறை வணக்கமும் புஸ்பாஞ்சலி நடன நிகழ்வும் நடைபெற்றது. இதன் பின்னர் தலமையுரையை முதலாவது நாள் காலை அமர்வை தலமைதாங்கிய அதிபர் ஐ தயானந்தராஜா அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து  கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் ஒருங்கமைப்பில் உருவாக்கப்பட்ட 125ம் ஆண்டுக்கான நினைவு தபால் முத்திரை வெளியீட்டினை கௌரவ கல்வி அமைச்சர் வெளியிட்டு வைத்தார். அதை தொடர்ந்து 125ம் ஆண்டுக்கான நினைவு மலர் வெளியீட்டினை பழைய மாணவரும் கொழும்பு நம்பிக்கை நிதியத்தின் தலைவருமான திரு கைலாசபிள்ளை அவர்கள் வெளியிட்டு வைத்தார். அதன் முதற் பிரதியை பழைய மாணவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ ஈ சரவணபவன் பெற்றுக்கொண்டார். அதன் சிறப்பு பிரதிகளை முன்னைனாள் அதிபர்களான திரு அ சிறீக்குமரன் மற்றும் திரு வி கணேசராஜா அவர்களும் பெற்றுக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து  ஏனையோரும் சிறப்பு பிரதிகளை பெற்றுக்கொண்டனர். அடுத்ததாக பிரதம விருந்தினர் உரையை விழாவின் பிரதவிருந்தினர் மாண்புமிகு கல்வி அமைச்சர் கெளரவ அகில விராச் காரியவசம் அவர்கள் நிகழ்த்தினார். அவ்வுரையில் இந்துக்கல்லூரியின் திருத்த வேலைகளுக்காக 12 மில்லியன் ரூபாவும் இதை தவிர புதிய 3 மாடி கட்டிடத்தொகுதி ஒன்றையும் நிர்மாணிக்க பணம் ஒதுக்குவதாக உறுதிமொழியளித்தார். 

அதை தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் ஆங்கில நாடகமான “beat away the barriers” இடம் பெற்றது அதனைத்தொடர்ந்து இசைப்பிரியர்களுக்கான கானாமிர்தம் நடைபெற்றது. இதன் பின்னர் முதலாம்நாள் காலை அமர்விற்கான நிகழ்வுகள் நன்றியுரைமற்றும் கல்லூரி கீதத்துடன் இனிதே நிறைவு பெற்றது.
 
முதலாம் நாள் மாலை அமர்வு, மாலை 5.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் வீற்றிருக்கும் ஞானவைரவர் ஆலயத்தில் விசேட பூஜைகள் நிறைவுற்றதும் விருந்தினர்கள் பாண்ட் வாத்தியத்துடன் விழா மண்டபத்திற்க்கு அழைத்து வரப்பட்டனர். முதல் நிகழ்வாக விருந்தினர்கள், அதீதிகளின் மங்கள விளக்கேற்றல், இறை வணக்கமும் நடைபெற்றது. தொடர்ந்து தலமையுரையை முதலாவது நாள் காலை அமர்வை தலைமை தாங்கிய கொழும்பு பழைய மாணவ சங்க தலைவர் திரு மு.ந அசோகன் அவர்கள் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையை விழாவின் பிரதவிருந்தினரான பழைய மாணவரும் ஜனாதிபதியின் முன்னைனாள் மேலதிக செயலாலருமான கலாநிதி வி அம்பலவாணர் அவர்கள் நிகழ்த்தினார். இதன் பிற்பாடு யாழ்ப்பாண பழைய மாணவர் சங்கம் ஒழுங்கமைத்திருந்த “என்னுடைய பேரனுக்காய் எவன் வைப்பான் பழத்தோட்டம்” என்ற கவிதா நிகழ்வும்  அதைத்தொடர்ந்து  “குருசபதம்” வடமோடிக்கூத்து நிகழ்வும் இடம்பெற்றது. அடுத்து நடுவர் கம்பவாரிதி திரு இ ஜெயராஜ் தலைமையில் சுழலும் சொற்போர் நடைபெற்றது இதில் இன்றைய தமிழ் இளைஞர்களுக்கு பெரிதும் அவசியமானது அறிவூக்கமே என்று சொல்லின் செல்வர் இரா செல்வவடிவேல் அவர்களும் அறநம்பிக்கையே என்று தமிழருவி சிவகுமாரன் அவர்களும் அன்புள்ளமே என்று கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களும் ஆளுமை நிமிர்வே என்று கலாநிதி பிரசாந்தன் அவர்களும் சொற்போர் புரிந்தனர். அதை தொடர்ந்து நன்றியுரை மற்றும் கல்லூரிக்கீத்தத்துடன் முதல்நாள் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவு பெற்றது.
 
செப்டெம்பர் 25ஆம் திகதி  வெள்ளிக்கிழமை இரண்டாம் நாள் காலை அமர்வு 8.30 மணிக்கு ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியின் புகழ் பூத்த பழைய மாணவனும், முன்னாள் பிரதி அதிபருமாகிய காலஞ்சென்ற கப்டன் நா.சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டார். தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை யாழ் இந்துக்கல்லூரிக்காக அர்ப்பணித்த சோமர் என்று எல்லாரோலும் அன்பாக அழைக்கப்பட்ட கப்டன் நா.சோமசுந்தரம், அன்னையின் 125ம் ஆண்டு விழாவைப் பார்த்த பின்பே விண்ணுலகம் செல்ல காத்திருந்தவர் போல விழா முடிந்து சிறிது நாட்களிலேயே எம்மைப் விட்டுப் பிரிந்திருந்தாலும் கடும் சுகயீனத்துடனும் இவ்விழாவிற்கு இவ் பிதாமகன் பிரதம விருந்தினராக வந்திருந்தது எம் அன்னைக்கு மேலும் பெருமை  சேர்த்தது என்றால்  மிகையாகாது. 

ஞானவைரவர் ஆலயத்தில் விசேட பூஜைகள் நிறைவுற்றதும் விருந்தினர்கள் பாண்ட் வாத்தியத்துடன் விழா மண்டபத்திற்க்கு அழைத்து வரப்பட்டனர். மங்கள விளக்கேற்றல், இறைவணக்கத்தைத் தொடர்ந்து இரண்டாம் நாள் காலை அமர்விற்கு தலைமை வகித்த சிங்கப்பூர் பழைய மாணவர் சங்க தலைவர் திரு சோ. நிரஞ்சன் நந்தகோபன் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து பிரதம விருந்தினரின் செய்தி விழாவில் வாசிக்கப்பட்டது. அதனையடுத்து புஷ்பாஞ்சலி மற்றும் இசையில் பக்தி எனும் இரு இசை நிகழ்சிகள் நடைபெற்றன. அதையடுத்து மாணவர்களின் சிறப்பு நிகழ்வாக கல்லூரி ஆசிரியர்களின் நெறியாள்கையில் உருவான ‘Merchant of Venice’ எனும் ஆங்கில நாடகம் அரங்கேறியிருந்தது. அன்னையின் கல்லூரிக்கீதத்தில் உள்ள ‘ஆங்கிலம் அருந்தமிழ்ஆரிய சிங்களம்’ என்ற வரிகளுக்கு இலக்கணமாகமாணவர்களின் ஆங்கிலப்புலமை சபையோரை வியக்கவைத்தது. அதையடுத்து ‘ஒரு ஆள் அரங்கு’ எனும் நிகழ்ச்சி அரங்கை அலங்கரித்தது. தொடர்ந்து ‘தலைநிமிர் கலையகம்’ என்னும் வில்லிசை நிகழ்வு இடம்பெற்றது.நன்றியுரையினைத் தொடர்ந்து கல்லூரி க்கீதத்துடன் காலை அமர்வு நிறைவுபெற்றது. 125ஆம் ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற கணிதவிஞ்ஞான வினா விடை சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிகளும் இந்நாள் காலையில் நடைபெற்றன.

இரண்டாம் நாள் மலை அமர்வு 5.00 மணிக்கு ஆரம்பமாகியது. யாழ் இந்துக் கல்லுரியின் ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்கத்தின தலைவர் திரு.சபா சுகந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னைநாள் அதிபர் திரு அ பஞ்சலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
ஞானவைரவர் ஆலயத்தில் பூஜைகள் நிறைவுற்றதும் விருந்தினர்கள் பாண்ட் வாத்தியத்துடன் விழாமண்டபத்திற்க்கு அழைத்துவரப்பட்டனர். மங்கள விளக்கேற்றல், இறைவணக்கத்தை தொடர்ந்து திரு சபா சுகந்தன் அவர்களின் தலைமை உரை இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து அரங்கேறிய ‘வாத்தியபிருந்தா’ எனும் இசைக் கருவிகளின் சங்கமம் சபையோரை ஆனந்தப்படுத்தியது. அதன்பின் யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் ‘இந்த மண்ணில் ஒரு ஜோதி எழுந்தது’ எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. தொடர்ந்து மேடையை அலங்கரித்த நிகழ்வு ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் இதன் ஆதரவில் நடாத்தப் பட்டு வரும் ஒட்டிசுட்டான் மகாதேவா படிப்பக மாணவர்கள் வழங்கிய ‘நல்லதோர் வீணை செய்தே’ எனும் நாடகமாகும். தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையும் அதன்பின் ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில ‘இந்துவின் இளங்காற்று’ என்னும இன்னிசை நிகழ்வு இடம்பெற்றது. நன்றியுரையினைத் தொடர்ந்து கல்லூரி கீதத்துடன் மாலை அமர்வு நிறைவுபெற்றது. இந்து அன்னையின் மைந்தனான தியாக தீபம் திலீபனின் நினைவு நாளான செப்டம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை கலை நிகழ்சிகள் எதுவும் நடைபெறவில்லை மாறாக, அன்னையின் 125ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு ஒன்று நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட அன்னையின் மைந்தர்கள் அன்று இரத்த தானம் வழங்கினார்கள்.

மூன்றாம் நாள் அமர்வின் காலை நிகழ்ச்சிகள் செப்டெம்பர் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 8.30 மணிக்கு யாழ் இந்துக்கல்லுரியின் கனடா பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு சு கதிர்காமநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதமவிருந்தினராக ஐக்கிய இராச்சிய பழைய மாணவர்சங்கத்தின் முன்னைநாள் தலைவரும் சமூக சேவையாளருமாகிய வைத்திய கலாநிதி.மு.வேற்பிள்ளை அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். விருந்தினர்களை விழா மண்டபத்திற்கு அழைத்து செல்வதுடன் ஆரம்பித்த காலை அமர்வுகள் விருந்தினர்களின் மங்கள விளக்கேற்றல், இறை வணக்கத்துடன் மேடைநிகழ்சிகள் ஆரம்பமாகின.தலைமை உரையை தொடர்ந்து மூத்தோர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. 75 வயதிற்கு மேற்பட்ட அன்னையின் மூத்த புதல்வர்கள் இந்நிகழ்வில் மேடையற்றிக் கௌரவிக்கப்பட்டனர்.

அதையடுத்து யாழ்ப்பாண பழைய மாணவர் சங்க ஒழுங்கமைப்பில் தனி நடிப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. தொடர்ந்து கொழும்பு பழைய மாணவர் சங்க ஒழுங்கமைப்பில் திரு. பாலேந்திராவின் நெறியாள்கையில் ‘நெட்டை மரங்கள்’ எனும் நாடகம் இடம்பெற்றது. நாடகத்தை தொடர்ந்து பிரதமவிருந்தினர் உரையும் அதையடுத்து ‘Jaffna Hindu Boys’ எனும் ஆங்கில பாடல் இடம்பெற்றது. தொடர்ந்து பேராசிரியர் மௌனகுருவின் நெறியாள்கையில் ‘காண்டவ தகனம்’ என்னும் நாடகம் அரங்கேறியது.

நன்றியுரையினைத் தொடர்ந்து கல்லூரி கீதத்துடன் காலை அமர்வு நிறைவுபெற்றது. மூன்றாம் நாள் மாலை நிகழ்வுகள் கல்லூரி அதிபர் திரு.ஐ.தயானந்தராஜா அவர்கள் தலைமையில் மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகின. பிரதம விருந்தினராக மாண்புமிகு வடமாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் கலந்து சிறப்பித்தார். விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்து செல்லப்படட்டு மங்கள விளகேர்றல், இறை வணக்கத்துடன் மேடை நிகழ்வுகள் இனிதே ஆரம்பமாகின. கல்லூரி அதிபரின் தலைமை உரையில் இவ்விழாவிற்குநிதி உதவி வழங்கிய பழைய மாணவர்கள், பழையமாணவ சங்கங்கள் குறிப்பாக கொழும்பு மற்றும் ஐக்கிய இராச்சிய கிளைகள் மற்றும் விழாவிற்கு வந்திருந்த பழைய மாணவர்கள், களத்தில் நின்று சரீர உதவி வழங்கிய இளம் பழைய மாணவர்களுக்கும், நிறைந்த மனதுடன் நினைவு கூர்ந்து,தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொண்டார். அடுத்து பிரதம விருந்தினர் மாண்புமிகு முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அதனையடுத்து மேடையேறியது ‘இந்து மான்மியம்’ எனும் நாட்டிய நாடகம். தொடர்ந்து கொழும்பு பழைய மாணவர் சங்க ஒழுங்கமைப்பில் யாழ் இந்து பழைய மாணவர் ஸ்ரீ.அருணந்தி அரூரன் வழங்கிய ‘கீத லாவண்யம்’ எனும் இசை நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து விழாவின் இறுதி நிகழ்வாக நிகழ்சிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் மற்றும் 125ம் ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பதக்கம், சான்றிதழ்கள், மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இத்தோடு கல்லூரி பிரதி அதிபர் திரு சதா நிமலன் அவர்களினால் ஒரு இன்ப அதிர்ச்சி தகவலாக ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் இதன் உறுப்பினர்கள் திரு அ அஜிலன், திரு சா ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் ஆதரவில் யாழ் இந்துவின் விளையாட்டுத்துறை அபிவிருத்தி நிதியம் ஒன்று, கொழும்பு பழைய மாணவர் சங்க உப தலைவர் திரு க வசந்தன் அவர்களை இணைப்பாளராக வைத்து ஆரம்பிக்கபட்ட உள்ளதையும் இதற்கு மேற்படி இரண்டு பழைய மாணவர்கள் ஆரம்ப நிதியாக 40 லட்சம் ரூபாவை அன்பளிப்பாக வழங்க முன்வத்துள்ளதையும் மண்டபம் நிறைந்த கரகோஷத்தின் மத்தியில் தெரிவித்தார்.

நன்றியுரையினைத் தொடர்ந்து கல்லூரிக் கீதத்துடன் 125ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட இப்பெருவிழா இனிதே நிறைவு பெற்றது. தொடர்ந்து கல்லூரி மைதானத்தில் பழைய மாணவர்கள், மாணவர்களும் ஆனந்தப் பெருங்களிப்பாக ஆட்டம், பாட்டத்துடன் பட்டாசுகள், வாண வேடிக்கைகளாலும் தமது மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எம்மைப் பொறுத்தவரை அன்னையின் இந்த பெருவிழாவினை தம் தார்மீக்க கடமையாய், களத்தில் இருந்து அனைத்து ஒழுங்கமைப்புகளையும் மிகச்சிறந்த முறையில் செயல் வடிவம் கொடுத்த இந்துவின் மைந்தர்கள் குறிப்பாக திரு மு கணேசராஜா திரு.அரவிந்த், திரு.ஐனகன், திருபாரதன், திரு.வசந்தன் ஆகியோரை இந்துக் கல்லூரி சமூகம் என்றென்றும் நினைவு கூரும்.

நிறைவாக, எம் கல்லூரி அன்னையின் 125ம் ஆண்டு நிறைவை மிகக் கோலாகலமாகவும் மன நிறைவாகவும் கொண்டாடிய மகிழ்ச்சியுடனும் அதே நேரம் இன்றுடன் இவ்விழா முடிவு பெற்று, ஒரு வாரமாக கூடியிருந்த மைந்தர்கள் நாம் எல்லோரும் ஒவ்வொரு திசையில் பிரிந்து போகப்போகின்றோம் என்ற கனத்த இதயத்துடனும், ஆனால் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தக் காலத்தில் நாங்கள் வாழ்ந்து தம் இந்து அன்னையின் பெரு விழாவில் பங்கெடுத்தோம் என்ற இறுமாப்புக் கலந்த பெருமையுடனும் உலகெங்கிலும் இருந்து வந்து கூடியிருந்த இந்துவின் மைந்தர்கள் ஒவ்வொருவராக விடை பெற்றனர்.

“வாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும்”

தொகுப்பு :
சபா சுகந்தன்
ஐக்கிய இராச்சிய ப.மா.ச.

தகவல் பகிர்வு :
ஐனகன், நிருஷன், அரவிந்த், வசந்தன்
கொழும்பு ப.மா.ச.